கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா வைரஸ்
மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 295 முதல்வர் பினராய் விஜயன் பேட்டி
திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா ஒருவர் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் 206 பேர் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். 78 பேருக்கு இவர்களுடன் தொடர்பு இருந்ததால் நோய் பரவியுள்ளது. இன்று கோட்டையத்தை சேர்ந்த வயதான தம்பதி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உள்பட 14 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வயதான தம்பதிக்கு நோய் குணமடைந்ததின் மூலம் கேரளா மருத்துவத்துறைக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ துறையினரின் சேவை பெரும் பாராட்டுக்குரியதாகும். தற்போது கேரளா முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 997 பேர் கண்காணிப்பில் உள்ளனர். வீடுகளில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 291 பேரும் மருத்துவமனைகளில் 706 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று புதிதாக 154 பேர் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு ஊருக்கு திரும்பியவர்கள் ஆவர். இதுவரை 9 ஆயிரத்து 139 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 8126 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கொரோனா நோய் பரிசோதனையை விரிவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நான்கு அல்லது ஐந்து நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இனி முதல் ஒன்று அல்லது இரண்டு நோய் அறிகுறி இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரேபிட் பரிசோதனையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று சரக்கு லாரிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சில பொருட்களுக்கு விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளுக்கும் விலை அதிகரித்துள்ளதாக புகார் கிடைத்துள்ளது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். லாக் டவுன் மூலம் ஏற்பட்டுள்ள நிலை குறித்தும், இதை வாபஸ் பெறும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்த முன்னாள் தலைமைச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில் 17 பேர் அடங்கிய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏராளமானோர் தங்களது வீடுகளிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முன்வந்துள்ளது. 1 மாதத்திற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. தினமும் 5 ஜிபி வரை டேட்டா இதன் மூலம் கிடைக்கும். தற்போது பிராட்பேண்ட் இணைப்பு இல்லாதவர்கள் மற்றும் புதிய இணைப்பு எடுப்பவர்களுக்கு இது பொருந்தும். இந்த தகவலை பிஎஸ்என்எல் கேரள தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். கேரளாவில் ரேப்பிட் பரிசோதனை நடத்த உபகரணங்கள் வருவதற்கு சசிதரூர் எம்பி உதவி செய்துள்ளார். இதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது லாக் டவுன் அமலில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ தொழிலாளர் நல நிதி அமைப்பினர் முன்வந்துள்ளனர். பார்களில் பணிபுரிபவர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதேபோல கட்டிட தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி தொழிலாளர்கள், கடைகள், மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், விவசாய தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதியில் இருந்து வட்டியில்லா கடன் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்